2.17 திருவேணுபுரம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
176 நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே. 01
177 அரவார் கரவன் அமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே. 02
178 ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்
மேகந் தவழும் வேணு புரமே.
03
179 காசக் கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுஇன் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே. 04
180 அரையார் கலைசேர் அனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் இடமாம்
நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே. 05
181 ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே. 06
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
182 ஏவும் படைவேந் தன்இரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே. 08
183 கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் இருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணிற் றிகழும் வேணு புரமே. 09
184 போகம் மறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் மறியா அடியார் இறையூர்
மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் மறிவார் வேணு புரமே. 10
185 கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே. 11
திருச்சிற்றம்பலம்