MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.29 திருப்புகலி - திருவிராகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    306 முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
    பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
    துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
    சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே. 01
    307 வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
    பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
    புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
    தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே. 02
    308 பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
    நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
    பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்
    தேவண விழாவளர் திருப்புகலி யாமே. 03
    309 மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்
    கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
    செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித்
    தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே. 04
    310 முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
    பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
    புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்
    செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே. 05
    311 வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
    அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
    கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத்
    தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே. 06
    312 நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
    வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
    பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்
    செல்வமறை யோருறை திருப்புகலி யாமே. 07
    313 பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
    அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
    நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
    செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே. 08
    314 கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
    ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
    நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்
    தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே. 09
    315 கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
    குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
    பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
    செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே. 10
    316 செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
    அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
    பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
    வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11

    திருச்சிற்றம்பலம்