2.31 திருக்கருப்பறியலூர் - திருவிராகம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
328 சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. 01
329 வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்
விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்
கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே. 02
330 வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங்
காதவ னிருப்பது கருப்பறிய லூரே. 03
331 மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 04
332 ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய
நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய
விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங்
கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 05
333 விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங்
கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 06
334 ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
காதின னிருப்பது கருப்பறிய லூரே. 07
335 வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள்
காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 08
336 பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து
நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்
கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 09
337 அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறிய லூரே. 10
338 நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே. 11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர், தேவியார் - கோல்வளையம்மை.
திருச்சிற்றம்பலம்