MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.34 திருப்பழுவூர் - திருவிராகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    361 முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்
    அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்
    மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
    பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே. 01
    362 கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
    ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்
    மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்
    பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே. 02
    363 வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த
    போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்
    வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்
    பாலென மிழற்றிநட மாடுபழு வூரே. 03
    364 எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்
    கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்
    மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்
    பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே. 04
    365 சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்
    நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர்
    வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்
    பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே. 05
    366 மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
    மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
    பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
    பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே. 06
    367 மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி
    சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்
    அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்
    பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே. 07
    368 உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்
    றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்
    குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு
    பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே. 08
    369 நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட
    அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்
    ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்
    மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே. 09
    370 மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்
    முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
    மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம்
    பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே. 10
    371 அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்
    பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்
    சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி
    வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வடவனநாதர், தேவியார் - அருந்தவநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்