2.38 திருச்சாய்க்காடு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
404 நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்
சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்
மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி
தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே. 01
405 பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்
வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்
கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்
தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே. 02
406 நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ
டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை
தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே. 03
407 வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்
தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே. 04
408 ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று
கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்
மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்
தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே. 05
409 துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்
வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்
சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே. 06
410 வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே. 07
411 இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே. 08
412 மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த
வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்
சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி
காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே. 09
413 ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே. 10
414 ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்
ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே. 11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயாவனேசுவரர், தேவியார் - குயிலுநன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்