2.44 திருஆமாத்தூர்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
459 கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே. 01
460 தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே. 02
461 வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே. 03
462 மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 04
463 கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே. 05
464 திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 06
465 அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே. 07
466 பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 08
467 வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே. 09
468 கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே. 10
469 செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே. 11
470 துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே. 01
471 கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே. 02
472 பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்
தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்
ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்
சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே. 03
473 கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்
பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்
ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்
காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே. 04
474 பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே
சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்
ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்
வேட நெறிநில்லா வேடமும் வேடமே. 05
475 சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற்
காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்
யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானத்
தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே. 06
476 மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை
வேறாக நில்லாத வேடமே காட்டினான்
ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்
கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே. 07
477 தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்
நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்
ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்
கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே. 08
478 புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளு மவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதே
அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே. 09
479 பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்
கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்
அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்
நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே. 10
480 ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்
கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்
நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்
பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே. 11
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர், தேவியார் - அழகியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்