MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.45 திருக்கைச்சினம்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    481 தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்
    மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான்
    நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர்
    கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 01
    482 விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்
    படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்
    நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்
    கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே. 02
    483 பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ்
    சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்
    ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக்
    காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே. 03
    484 பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்
    சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த
    விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவியக்
    கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 04
    485 தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்
    வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்
    சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்நஞ் சுண்டனங்கைக்
    காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. 05
    நஞ்சுண்டு--அனங்கை எனப்பிரித்து, அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க.
    486 மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்
    அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்
    திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற்
    கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 06
    487 வரியரவே நாணாக மால்வரையே வில்லாக
    எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்
    பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்
    கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே. 07
    488 போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்
    மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்
    நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங்
    காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே. 08
    489 மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்
    எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்
    பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற்
    கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. 09
    இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10
    490 தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்
    கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்
    பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார்
    விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே.
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கைச்சினநாதர், தேவியார் - வேள்வளையம்மை.
    திருச்சிற்றம்பலம்