2.46 திருநாலூர்த்திருமயானம்
பண் - சீகாமரம்
திருச்சிற்றம்பலம்
491 பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்
மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்
நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து
மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே. 01
492 சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக
ஆடும் பறைசங் கொலியோ டழகாக
நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப்
பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே. 02
493 கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்
றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான்
நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்
சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே. 03
494 கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்
நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்
ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற்
சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே. 04
495 கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்
பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய
நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்
இறையானென் றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே. 05
496 கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்
பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி
நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை
நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே. 06
497 கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்
பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்
நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை
எண்பாவு சிந்தையார்க் கேலா இடர்தானே. 07
498 பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்
வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்
நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்
அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே. 08
499 மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்
மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்
நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்
பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே. 09
500 துன்பாய மாசார் துவராய போர்வையார்
புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்
நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே
இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே. 10
501 ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்
நாலு மறையோது நாலூர் மயானத்தைச்
சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்
கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே. 11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பலாசவனேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்