MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.48 திருவெண்காடு
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    513 கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே. 01
    514 பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. 02
    515 மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி
    எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
    பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே. 03
    516 விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே. 04
    517 வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே. 05
    518 தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. 06
    519 சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
    மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே. 07
    520 பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
    உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே. 08
    521 கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
    ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
    வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்
    றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. 09
    522 போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
    பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்
    றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே. 10
    523 தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர், தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
    திருச்சிற்றம்பலம்