MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.53 திருப்புறவார் - பனங்காட்டூர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    568 விண்ண மர்ந்தன மும்ம தில்களை
    வீழ வெங்கணை யாலெய் தாய்வரி
    பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்
    பெண்ண மர்ந்தொரு பாக மாகிய
    பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்
    கண்ண மர்ந்தவ னேகலந்தார்க் கருளாயே. 01
    569 நீடல் கோடல் அலரவெண் முல்லை
    நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
    பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
    துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
    ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே. 02
    570 வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை
    வார்பு னற்கரை யருகெ லாம்வயற்
    பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்
    பூளை யுந்நறுங் கொன்றை யும்மத
    மத்த மும்புனை வாய்க ழலிணைத்
    தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே. 03
    571 மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி
    மேற்ப டுகலின் மேதி வைகறை
    பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
    ஆய்ந்த நான்மறை பாடி யாடும்
    அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
    சாய்ந்தடி பரவுந் தவத்த்தார்க் கருளாயே. 04
    572 செங்க யல்லொடு சேல்செ ருச்செயச்
    சீறி யாழ்முரல் தேனி னத்தொடு
    பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்
    கங்கை யும்மதி யுங்க மழ்சடைக்
    கேண்மை யாளொடுங் கூடி மான்மறி
    அங்கை யாடலனே அடியார்க் கருளாயே. 05
    573 நீரி னார்வரை கோலி மால்கடல்
    நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்
    பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்
    காரி னார்மலர்க் கொன்றை தாங்கு
    கடவு ளென்றுகை கூப்பி நாடொறுஞ்
    சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே. 06
    574 கைய ரிவையர் மெல்வி ரல்லவை
    காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி
    பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்
    மெய்ய ரிவையோர் பாக மாகவும்
    மேவி னாய்கழ லேத்தி நாடொறும்
    பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளாயே. 07
    575 தூவி யஞ்சிறை மென்ன டையன
    மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்
    பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்
    மேவி யந்நிலை யாய ரக்கன
    தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்
    ஏவிய பெருமான் என்பவர்க் கருளாயே. 08
    576 அந்தண் மாதவி புன்னை நல்ல
    அசோக மும்மர விந்த மல்லிகை
    பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்
    எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்
    என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்
    சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே. 09
    577 நீண மார்முரு குண்டு வண்டினம்
    நீல மாமலர் கவ்வி நேரிசை
    பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்
    நாண ழிந்துழல் வார்ச மணரும்
    நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை
    ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே. 10
    578 மையி னார்மணி போல்மி டற்றனை
    மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்
    பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர்
    ஐய னைப்புக ழான காழியுள்
    ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்
    செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே. 11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - திருப்புருவமின்னாளம்மை.
    திருச்சிற்றம்பலம்