MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.58 திருக்குடவாயில்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    623 கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்
    அலைவாழுஞ் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர்
    குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்
    நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே. 01
    624 அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப அங்கையில்
    செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்
    குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற்
    படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே. 02
    625 கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன்
    றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர்
    குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்
    நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 03
    626 மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந்
    தெறியாரும் மாமழுவும் எரியுமேந்துங் கொள்கையீர்
    குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்
    நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 04
    627 இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாகப்
    பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்
    குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
    விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே. 05
    628 அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர்
    இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர்
    குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயிற்
    திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே. 06
    629 பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்
    ஆடலார் மாநடத்தீர் அரிவைபோற்றும் ஆற்றலீர்
    கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்
    நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே. 07
    630 கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்
    அங்காந்து தள்ளாட அழலாய்நிமிர்ந்தீர் இலங்கைக்கோன்
    தங்காதல் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில்
    பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே. 08
    இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 09
    631 தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும்
    ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொள்மாடக் குடவாயில்
    ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத்
    தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே. 10
    632 நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்
    குளிர்பூங் குடவாயிற் கோயில்மேய கோமானை
    ஒளிர்பூந் தமிழ்மாலை உரைத்தபாட லிவைவல்லார்
    தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே. 11

    திருச்சிற்றம்பலம்