MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.59 சீகாழி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    633 நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்
    கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
    வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
    அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே. 01
    634 ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து
    காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
    நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
    பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே. 02
    635 வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக்
    கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி
    முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
    அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே. 03
    636 மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
    கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்
    பனைக்காப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி
    நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே. 04
    637 பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
    கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்
    சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்
    கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே. 05
    638 மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
    கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்
    பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச்
    சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே. 06
    639 புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்
    கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்
    பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
    முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே. 07
    640 அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்
    கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்
    பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்
    பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே. 08
    641 மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்
    காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
    பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
    கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே. 09
    642 அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
    கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்
    தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்
    துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே. 10
    643 ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
    காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
    தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்
    வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே. 11

    திருச்சிற்றம்பலம்