MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.61 திருவெண்காடு
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்
    655 உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்
    தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
    அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை ஊர்போலும்
    வெண்டா மரைமேல் கருவண் டியாழ்செய் வெண்காடே. 01
    656 நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
    பாதம் பன்னால் பணியும் அடியார் தங்கள்மேல்
    ஏதந் தீர இருந்தான் வாழும் ஊர்போலும்
    வேதத் தொலியாற் கிளிசொல் பயிலும் வெண்காடே. 02
    657 தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்
    கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்
    உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்
    வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே. 03
    658 நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்
    உரையால் வேறா வுள்குவார்கள் உள்ளத்தே
    கரையா வண்ணங் கண்டான் மேவும் ஊர்போலும்
    விரையார் கமலத் தன்னம் மருவும் வெண்காடே. 04
    659 பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்
    றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
    தள்ளிப் போக அருளுந் தலைவன் ஊர்போலும்
    வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே. 05
    660 ஒளிகொள் மேனி யுடையாய் உம்பர் ஆளீயென்
    றளிய ராகி அழுதுற் றூறும் அடியார்கட்
    கெளியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்
    வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே. 06
    661 கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினால்
    மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்
    ஆள்வித் தமரர் உலகம் அளிப்பான் ஊர்போலும்
    வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே. 07
    662 வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
    முளையார் மதியஞ் சூடியென்று முப்போதும்
    இளையா தேத்த இருந்தான் எந்தை ஊர்போலும்
    விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே. 08
    663 கரியா னோடு கமல மலரான் காணாமை
    எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்
    குரியான் அமரர்க் கரியான் வாழும் ஊர்போலும்
    விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே. 09
    664 பாடும் அடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த
    ஆடும் அரவம் அசைத்த பெருமான் அறிவின்றி
    மூடம் உடைய சமண்சாக் கியர்கள் உணராத
    வேடம் உடைய பெருமான் பதியாம் வெண்காடே. 10
    665 விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
    கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
    நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
    கடையா வினைகள் அமர லோகம் ஆள்வாரே. 11

    திருச்சிற்றம்பலம்