MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.62 திருமீயச்சூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    666 காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
    பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
    மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதன்
    மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே. 01
    667 பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர்
    நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி
    ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி
    மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே. 02
    668 பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்
    மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத்
    தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்க்
    கன்னே ரிமையோர் உலக மெய்தற் கரிதன்றே. 03
    669 வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப்
    பாகம் உமையோ டாகப் படிதம் பலபாட
    நாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன்
    மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே. 04
    670 விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
    படையார் பூதஞ் சூழப் பாட லாடலார்
    பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்
    விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே. 05
    671 குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றை
    ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி
    நளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்
    மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே. 06
    672 நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
    கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்
    காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்
    மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே. 07
    673 புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர்
    ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்ச
    வலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னை
    மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே. 08
    674 காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
    போதி லவனும் மாலுந் தொழப் பொங் கெரியானார்
    கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
    மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே. 09
    675 கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக்
    கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார்
    பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால்
    விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே. 10
    676 வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர்
    நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
    பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கி
    ஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே. 11
    > இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர், தேவியார் - சுந்தரநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்