2.63 திருஅரிசிற்கரைப்புத்தூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
677 மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே
துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே. 01
678 மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால்
ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர்
நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும்
பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே. 02
679 பல்லார் தலைசேர் மாலைசூடிப் பாம்பும்பூண்
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக்
கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால்
பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே. 03
680 வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்ற
கரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர்
அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே. 04
681 என்போ டரவம் ஏனத் தெயிறோ டெழிலாமை
மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர்
அன்போ டுருகும் அடியார்க் கன்பர் அமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே. 05
682 வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்
தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும்
புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே. 06
683 நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர்
அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே. 07
684 இத்தே ரேக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான்
வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரான
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே. 08
685 முள்ளார் கமலத் தயன்மால் முடியோ டடிதேட
ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலுங்
கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே. 09
686 கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லும் மெய்யல்ல
பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா என்பார்க் கையுற வின்றி யழகாமே. 10
687 நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்
பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே. 11
இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - படிக்காசளித்தவீசுவரர், தேவியார் - அழகம்மை.
திருச்சிற்றம்பலம்