MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.67 திருப்பெரும்புலியூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    720 மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
    விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
    கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
    பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. 01
    720 துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோ ள்கள்
    மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு கங்கைக்
    கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த
    பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 02
    கங்கைக்கன்னிகளின் புனையோடு - என்பதனுக்கு கங்கை
    யாறுகளாகிய மாலையுடனெனப்பொருள் தோன்றுகின்றது.
    722 கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக ஏந்தித்
    துள்ள மிதித்துநின் றாடுந் தொழிலர் எழில்மிகு செல்வர்
    வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல்மிளிர் கின்ற
    பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 03
    723 ஆட லிலையம் உடையார் அருமறை தாங்கியா றங்கம்
    பாட லிலையம் உடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்
    ஊட லிலையம் உடையார் யோகெனும் பேரொளி தாங்கி
    பீட லிலையம் உடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. 04
    724 தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக்
    காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த
    நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த
    பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 05
    725 கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்
    முற்றி தறிதுமென் பார்கள் முதலியர் வேதபு ராணர்
    மற்றி தறிதுமென் பார்கள் மனத்திடை யார்பணி செய்யப்
    பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே. 06
    726 மறையுடை யாரொலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்
    குறையுடை யார்குறை தீர்ப்பார் குழகர் அழகர் நஞ்செல்வர்
    கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
    பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே. 07
    727 உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளி தாகித்
    துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமும் இன்பமுந் தோற்றி
    மறவியென் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்
    பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 08
    728 சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்
    நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்
    தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய
    பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 09
    729 உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட்
    கருமை யுடையன காட்டி அருள்செயும் ஆதி முதல்வர்
    கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப்
    பெருமை யுடைப் பெருமானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 10
    730 பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை
    நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
    மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
    நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வியாக்கிரபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்