MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.68 திருக்கடம்பூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    731 வானமர் திங்களும் நீரும் மருவிய வார்சடை யானைத்
    தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக்
    கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில்
    தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே. 01
    732 அரவினொ டாமையும் பூண்டு அந்துகில் வேங்கை யதளும்
    விரவுந் திருமுடி தன்மேல் வெண்திங்கள் சூடி விரும்பிப்
    பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
    இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கது வாமே. 02
    733 இளிபடும் இன்சொலி னார்கள் இருங்குழல் மேலிசைந் தேறத்
    தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில்
    ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப்
    புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுதும் நாமே. 03
    இளி - என்பது ஏழிசையிலொன்று.
    734 பறையொடு சங்கம் இயம்பப் பல்கொடி சேர்நெடு மாடங்
    கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில்
    மறையொலி கூடிய பாடல் மருவிநின் றாடல் மகிழும்
    பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே. 04
    735 தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில்
    நாவிரி கூந்தல்நற் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன்
    காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில்
    பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே. 05
    736 தண்புனல் நீள்வயல் தோறுந் தாமரை மேலனம் வைகக்
    கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில்
    பெண்புனை கூறுடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப்
    பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே. 06
    737 பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத
    கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில்
    ஒலிதிகழ் கங்கை கரந்தான் ஒண்ணுத லாள்உமை கேள்வன்
    புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே. 07
    738 பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில்
    காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில்
    மேம்படு தேவியோர் பாகம் மேவியெம் மானென வாழ்த்தித்
    தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே. 08
    739 திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும்
    இருவரு மாயறி வொண்ணா எரியுரு வாகிய ஈசன்
    கருவரை காலில் அடர்த்த கண்ணுத லான்கடம் பூரில்
    மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே. 09
    740 ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களும் அந்துவராடைச்
    சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர்
    வேடம் பலபல காட்டும் விகிர்தன்நம் வேதமு தல்வன்
    காடத னில்நட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே. 10
    741 விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடங்
    கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி
    நடைநவில் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும்
    படைநவில் பாடல்ப யில்வார் பழியொடு பாவ மிலாரே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அமுதகடேசுவரர், தேவியார் - சோதிமின்னம்மை.

    திருச்சிற்றம்பலம்