MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.69 திருப்பாண்டிக்கொடுமுடி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    742 பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
    கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
    எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும்
    பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 01
    743 தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்
    வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
    நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்
    பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே. 02
    744 சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும்
    புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்
    விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்
    படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 03
    745 நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக்
    கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி
    மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை
    பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 04
    746 போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள்
    ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்
    நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப்
    பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே. 05
    747 கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்
    பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்
    வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்
    படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 06
    748 ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந்
    தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங்
    கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்
    பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 07
    749 புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும்
    பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங்
    கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்
    பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே. 08
    750 திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப்
    பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்
    மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே
    பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே. 09
    751 புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால்
    மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்
    சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு
    பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே. 10
    752 கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
    பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச்
    சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து
    நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. 11
    இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கொடுமுடிநாதேசுவரர், தேவியார் - பண்மொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்