2.70 திருப்பிரமபுரம் - திருச்சக்கரமாற்று
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
753 பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே. 01
754 வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே. 02
755 புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி
நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே. 03
756 வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே. 04
757 தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே. 05
758 தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட
அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா லேந்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே. 06
759 சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவோ டந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கி
பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே. 07
760 புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து
திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே. 08
761 சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப்
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே. 09
762 செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய
கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவோ டோ ங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக்
கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே. 10
763 கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குரு புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே. 11
764 காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலை
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே. 12
இது பாண்டியராசனுடைய சுரப்பிணிதீர்க்கச்சென்
றாசனத்திலிருந்தபோது அவ்வரசன் சுவாமிகளை
நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று
திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம்.
திருச்சிற்றம்பலம்