MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.72 திருநணா
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    776 பந்தார் விரல்மடவாள் பாகமா
    நாகம்பூண் டேற தேறி
    அந்தார் அரவணிந்த அம்மா
    னிடம்போலும் அந்தண் சாரல்
    வந்தார் மடமந்தி கூத்தாட
    வார்பொழிலில் வண்டு பாடச்
    செந்தேன் தெளியொளிரத் தேமாக்
    கனியுதிர்க்குந் திருந ணாவே. 01
    777 நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான்
    மற்றொருகை வீணை யேந்தி
    ஈட்டுந் துயரறுக்கும் எம்மா
    னிடம்போலு மிலைசூழ் கானில்
    ஓட்டந் தருமருவி வீழும்
    விசைகாட்ட முந்தூ ழோசைச்
    சேட்டார் மணிகள் அணியுந்
    திரைசேர்க்குந் திருந ணாவே. 02
    778 நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள்
    பாகமாய் ஞால மேத்த
    மின்றாங்கு செஞ்சடையெம் விகிதர்க்
    கிடம்போலும் விரைசூழ் வெற்பில்
    குன்றோங்கி வன்றிரைகள் மோத
    மயிலாலுஞ் சாரற் செவ்வி
    சென்றோங்கி வானவர்க ளேத்தி
    அடிபணியுந் திருந ணாவே. 03
    779 கையில் மழுவேந்திக் காலிற்
    சிலம்பணிந்து கரித்தோல் கொண்டு
    மெய்யில் முழுதணிந்த விகிர்தர்க்
    கிடம்போலு மிடைந்து வானோர்
    ஐய ரவரெம் பெருமா
    னருளென்றென் றாத ரிக்கச்
    செய்ய கமலம் பொழிதே
    னளித்தியலுந் திருந ணாவே. 04
    780 முத்தேர் நகையா ளிடமாகத்
    தம்மார்பில் வெண்ணூல் பூண்டு
    தொத்தேர் மலர்ச்சடையில் வைத்தா
    ரிடம்போலுஞ் சோலை சூழ்ந்த
    அத்தேன் அளியுண் களியா
    லிசைமுரல ஆலத் தும்பி
    தெத்தே யெனமுரலக் கேட்டார்
    வினைகெடுக்குந் திருந ணாவே. 05
    781 வில்லார் வரையாக மாநாகம்
    நாணாக வேடங் கொண்டு
    புல்லார் புரமூன் றெரித்தார்க்
    கிடம்போலும் புலியு மானும்
    அல்லாத சாதிகளு மங்கழல்மேற்
    கைகூப்ப அடியார் கூடிச்
    செல்லா வருநெறிக்கே செல்ல
    அருள்புரியுந் திருந ணாவே. 06
    782 கானார் களிற்றுரிவை மேல்மூடி
    ஆடரவொன் றரைமேற் சாத்தி
    ஊனார் தலையோட்டி லூணுகந்தான்
    றானுகந்த கோயி லெங்கும்
    நானா விதத்தால் விரதிகள்நன்
    னாமமே யேத்தி வாழ்த்தத்
    தேனார் மலர்கொண் டடியார்
    அடிவணங்குந் திருந ணாவே. 07
    783 மன்னீ ரிலங்கையர்தங் கோமான்
    வலிதொலைய விரலா லூன்றி
    முந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க்
    கிடம்போலும் முநனைசேர் சீயம்
    அன்னீர் மைகுன்றி அழலால்
    விழிகுறைய வழியு முன்றில்
    செந்நீர் பரப்பச் சிறந்து
    கரியொளிக்குந் திருந ணாவே. 08
    784 மையார் மணிமிடறன் மங்கையோர்
    பங்குடையான் மனைக டோ றும்
    கையார் பலியேற்ற கள்வன்
    இடம்போலுங் கழல்கள் நேடிப்
    பொய்யா மறையானும் பூமி
    யளந்தானும் போற்ற மன்னிச்
    செய்யார் எரியாம் உருவ
    முறவணங்குந் திருந ணாவே. 09
    785 ஆடை யொழித்தங் கமணே
    திரிந்துண்பார் அல்லல் பேசி
    மூடு உருவம் உகந்தார்
    உரையகற்றும் மூர்த்தி கோயில்
    ஓடு நதிசேரும் நித்திலமும்
    மொய்த்தகிலுங் கரையில் சாரச்
    சேடர் சிறந்தேத்தத் தோன்றி
    யொளிபெருகுந் திருந ணாவே. 10
    786 கல்வித் தகத்தால் திரைசூழ்
    கடற்காழிக் கவுணி சீரார்
    நல்வித் தகத்தால் இனிதுணரும்
    ஞானசம் பந்தன் எண்ணுஞ்
    சொல்வித் தகத்தால் இறைவன்
    திருநணா ஏத்து பாடல்
    வல்வித் தகத்தான் மொழிவார்
    பழியிலரிம் மண்ணின் மேலே. 11
    இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. இது பவானி நதி
    காவிரியுடன் சேருமிடமாதலால், பவானிகூடலெனப்
    பெயர் வழங்கப்படுகின்றது.
    சுவாமிபெயர் - சங்கமுகநாதேசுவரர்,
    தேவியார் - வேதமங்கையம்மை.

    திருச்சிற்றம்பலம்