2.75 சீகாழி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
811 விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப்
பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்
கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்
மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே. 01
812 வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
பலிவி ரும்பியதோர் கையினான்பர மேட்டியான்
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்
நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே. 02
813 சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத்
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்
மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் அல்லனே. 03
814 பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை
மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. 04
815 தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய்
நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக்
கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்
தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே. 05
816 சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்
பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே. 06
817 முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ
அடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. 07
818 வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்
நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே
தொல்லி ருக்குமறை யேத்துகந்துடன் வாழுமே. 08
819 மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்
வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே. 09
820 நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்
அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்
கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே. 10
821 கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே. 11
திருச்சிற்றம்பலம்