2.78 திருவிளநகர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
844 ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர்
குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி
நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்
மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே. 01
845 அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்
டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்
புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய
மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே. 02
846 வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த்
தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட
காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்
மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே. 03
847 கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார்
நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்
மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே. 04
848 பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்
துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்
சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்
மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே. 05
849 தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும்
யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்
மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்
மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே. 06
850 சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார்
கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்
மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்
விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே. 07
851 படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார்
அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார்
விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்
மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே. 08
852 கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்
பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்
மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே. 09
853 உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்
உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்
உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்
உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே. 10
854 மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய
நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்
இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே. 11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - துறைகாட்டும்வள்ளநாதர், தேவியார் - தோழியம்மை.
திருச்சிற்றம்பலம்