2.80 திருக்கடவூர்மயானம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
866 வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்
கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே. 01
867 மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்திக்
கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்
செங்கண் வெள்ளே றேறிச் செல்வஞ் செய்யா வருவார்
அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே. 02
868 ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்திக்
காட திடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. 03
869 இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார்
மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே. 04
870 வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்
துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக்
கள்ள நகுவெண் டலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. 05
871 பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார்
ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே யூர்வார்
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்
பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. 06
872 பாச மான களைவார் பரிவார்க் கமுதம் அனையார்
ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. 07
873 செற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் விரலாற்
கற்குன் றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்
மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்
பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 08
874 வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார்
கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
திருமா லொடுநான் முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப்
பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 09
875 தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர்
பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 10
876 மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த
அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாகப்
பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே. 11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.
திருச்சிற்றம்பலம்