MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.81 திருவேணுபுரம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    877 பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
    ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து
    வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
    பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 01
    878 சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்
    உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்
    அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்
    படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 02
    879 கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
    திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்
    மங்கையோர் கூறுடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப்
    பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 03
    880 நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
    ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே
    சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
    கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே. 04
    881 ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
    சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
    காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
    பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே. 05
    882 மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
    துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
    பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்
    தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே. 06
    883 நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
    கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்
    ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்
    கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே. 07
    884 இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
    விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
    கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்
    விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே. 08
    885 தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்
    போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
    பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
    சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே. 09
    886 நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
    புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
    நிலையாகப் பேணிநீ சரணென்றார் தமையென்றும்
    விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே. 10
    இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 11

    திருச்சிற்றம்பலம்