2.82 திருத்தேவூர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
887 பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே. 01
888 ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 02
889 மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர்
அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 03
890 முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்
அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 04
891 பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர்
ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 05
892 பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர்
அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே. 06
893 வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 07
894 தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் நெரிந்து
வெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர்
அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே. 08
895 முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணா
எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே. 09
896 பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவூர்
ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே. 10
897 அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே. 11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தேவகுருநாதர், தேவியார் - தேன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்