MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.92 திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    995 பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி
    நட்டம் நள்ளிரு ளாடும் நாதனார் நவின்றுறை கோயில்
    புட்டன் பேடையோ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
    வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே. 01
    996 முயல் வளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை
    இயல் வளாவிய துடைய இன்னமு தெந்தையெம் பெருமான்
    கயல் வளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்
    வயல் வளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. 02
    997 தொண்டர் தண்கயம் மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையுங்
    கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலங்
    கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்
    வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. 03
    998 பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாட லறாத
    விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரோர் பாகம்
    பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த
    வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. 04
    999 ஈசன் ஏறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
    பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்
    மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
    வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. 05
    1000 தளிரி ளங்கொடி வளரத் தண்கயம் இரிய வண்டேறிக்
    கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில்
    உளரி ளஞ்சுனை மலரும் ஒளிதரு சடைமுடி யதன்மேல்
    வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே. 06
    1001 தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி யெழில்நரம் பெடுத்துத்
    துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்
    அஞ்ச னம்பிதிர்ந் தனைய அலைகடல் கடைய அன்றெழுந்த
    வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே. 07
    1002 சாம வேதமோர் கீத மோதியத் தசமுகன் பரவும்
    நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்
    காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்
    வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே. 08
    1003 சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு
    நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
    ஆர ணங்குறும் உமையை அஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
    வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே. 09
    1004 கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னாற்றம்
    மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யென விரும்பேற்
    செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
    மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே. 10
    1005 பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற் புகலூரில்
    மங்குல் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்
    தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் தண்டமிழ் பத்தும்
    எங்கும் ஏத்த வல்லார்கள் எய்துவர் இமையவ ருலகே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர், தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.

    திருச்சிற்றம்பலம்