MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.93 திருத்தெங்கூர்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    1006 புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்
    கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்
    இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவர் இடுபலிக் கெழில்சேர்
    விரைசெய் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 01
    1007 சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்குங்
    கொத்தின் தாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்
    பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த
    வித்தன் தாழ்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 02
    1008 அடையும் வல்வினை யகல அருள்பவர் அனலுடை மழுவாட்
    படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்
    சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்
    விடையர் வீங்கெழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 03
    1009 பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்
    கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்
    வண்டு மாமல ரூதி மதுவுண இதழ் மறிவெய்தி
    விண்ட வார்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 04
    1010 சுழித்த வார்புனற் கங்கை சூடியோர் காலனைக் காலால்
    தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை
    கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல் பொடியாக
    விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 05
    1011 தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்
    எல்லி சூடிநின் றாடும் இறையவர் இமையவ ரேத்தச்
    சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற
    வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 06
    1012 நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்
    முறிகொள் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்
    பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி
    வெறிகொள் பூம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 07
    1013 எண்ணி லாவிற லரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்
    கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர்
    தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்
    விண்ணு லாம்பொழிற் றெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 08
    1014 தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்
    பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்
    ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்
    வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்ற மர்ந்தாரே. 09
    1015 சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர் சொல்தவிர
    இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமின் இருமருப் பொருகைக்
    கடங்கொள் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
    விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே .10
    1016 வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
    கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்
    சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும் வல்லார்மேல்
    பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வெள்ளிமலையீசுவரர், தேவியார் - பெரியாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்