MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.94 திருவாழ்கொளிபுத்தூர்
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    1017 சாகை யாயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்
    ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
    தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்
    வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே. 01
    1018 எண்ணி லீரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்
    கண்ணு மாயிரம் உடையார் கையுமோ ராயிரம் உடையார்
    பெண்ணு மாயிரம் உடையார் பெருமையோ ராயிரம் உடையார்
    வண்ண மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 02
    1019 நொடியோ ராயிரம் உடையர் நுண்ணிய ராமவர் நோக்கும்
    வடிவு மாயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்
    முடியு மாயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார்
    வடிவு மாயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 03
    1020 பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்
    குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்
    அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார்
    வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 04
    1021 பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார்
    விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்
    அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
    வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 05
    1022 தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
    கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்
    கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தை
    வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 06
    1023 மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
    தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
    ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர் நின்றேத்த
    வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 07
    1024 ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து
    வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்
    கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க
    வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 08
    1025 வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் றானும்
    என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி
    முன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லை
    மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே. 09
    1026 மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்
    குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல
    துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்
    வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே. 10
    1027 நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன்
    வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை
    இலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார்
    நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாணிக்கவண்ணநாதர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

    திருச்சிற்றம்பலம்