MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.95 திருஅரைசிலி
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    1028 பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை
    கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
    வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோல்மேல்
    ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே. 01
    1029 ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி
    வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த
    ஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
    ஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. 02
    1030 கங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிரிள வனமென்
    கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன்
    சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க் கருள்செய்து
    அங்கை யாலன லேந்தும் அடிகளுக் கிடம்அர சிலியே. 03
    1031 மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்
    புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
    தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை
    அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே. 04
    1032 மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித்
    தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து
    வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி
    ஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. 05
    1033 பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு மத்தாகப்
    பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்
    கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு
    அரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே. 06
    இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. 07
    1034 வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
    கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்
    பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு
    அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடம்அர சிலியே. 08
    1035 குறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் றானும்
    வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ்
    செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண
    அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே. 09
    1036 குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
    திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
    பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
    அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே. 10
    1037 அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி யடிகளைக் காழி
    நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ்
    சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த
    வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திருப் பாரே. 11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அரைசிலிநாதர், தேவியார் - பெரியம்மை.

    திருச்சிற்றம்பலம்