MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.100 திருக்கோவலூர் வீரட்டம் - திருவிராகம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1081 படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
    இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
    குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
    விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே. 01
    1082 கரவலாளர் தம்மனைக் கடைகள்தோறுங் கால்நிமிர்த்
    திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டினீர்
    குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
    விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே. 02
    1083 உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்
    அள்ளற்சேற்றிற் காலிட்டங் கவலத்துள் அழுந்தாதே
    கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்
    வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே. 03
    1084 கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
    இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்
    பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
    வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே. 04
    1085 உளங்கொள் போகமுய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்
    துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே
    வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
    விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே. 05
    1086 கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும்
    ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியுங்
    கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்
    வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே. 06
    1087 உரையும்பாட்டுந் தளர்வெய்தி உடம்புமூத்த போதின்கண்
    நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால்
    வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
    விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே. 07
    1088 ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவை
    ஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல்
    போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
    வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே. 08
    1089 ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு
    கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனில்
    நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்
    வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே. 09
    1090 குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும்
    அறிவிலாத அமணர்சொல் அவத்தமாவ தறிதிரேல்
    பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனில்
    வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே. 10
    1091 கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
    பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால்
    அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனில்
    விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே. 11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - சிவானந்தவல்லியம்மை.

    திருச்சிற்றம்பலம்