MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.103 திரு அம்பர்த்திருமாகாளம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1114 புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப்
    போழிள மதிசூடிப்
    பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும்
    பிணையல்செய் தவர்மேய
    மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளம்
    அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க்
    கருவினை அடையாவே. 01
    1115 அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள்
    அங்கையில் அனலேந்தி
    இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக
    ளிசைவன பலபூதம்
    மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளம்
    பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர்
    பயன்தலைப் படுவாரே. 02
    1116 குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங்
    குரைகழ லடிசேரக்
    கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங்
    கருத்தறிந் தவர்மேய
    மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளம்
    வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை
    வல்வினை அடையாவே. 03
    1117 எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர்
    இழைவளர் நறுங்கொன்றை
    தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந்
    தாமகிழ்ந் தவர்மேய
    மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளங்
    கங்கு லும்பக லுந்தொழும் அடியவர்
    காதன்மை யுடையாரே. 04
    1118 நெதியம் என்னுள போகமற் றென்னுள
    நிலமிசை நலமாய
    கதியம் என்னுள வானவர் என்னுளர்
    கருதிய பொருள்கூடில்
    மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளம்
    புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண்
    டேத்துதல் புரிந்தோர்க்கே. 05
    1119 கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக்
    கனல்விடு சுடர்நாகந்
    தெண்ணி லாவொடு திலதமு நகுதலை
    திகழவைத் தவர்மேய
    மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளம்
    உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ்
    வுலகினில் உயர்வாரே. 06
    1120 தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ்
    சுடர்விடு நறுங்கொன்றை
    பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும்
    புகழ்புரிந் தவர்மேய
    மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளம்
    பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற்
    பெருமையைப் பெறுவாரே. 07
    1121 பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப்
    பருவரைக் கீழூன்றி
    எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த
    இறையவன் உறைகோயில்
    மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளங்
    கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை
    கனலிடைச் செதிளன்றே. 08
    1122 உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின்
    ஒளிகிளர் மலரோனும்
    பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும்
    பரவநின் றவர்மேய
    மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளங்
    கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங்
    கவலையுங் களைவாரே. 09
    1123 பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும்
    பீலிகொண் டுழல்வாருங்
    கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங்
    கழறநின் றவர்மேய
    வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை
    வருபுனல் மாகாளம்
    பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப்
    பரவுதல் செய்வோமே. 10
    1124 மாறு தன்னொடு மண்மிசை யில்லது
    வருபுனல் மாகாளத்
    தீறும் ஆதியு மாகிய சோதியை
    ஏறமர் பெருமானை
    நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம்
    பந்தன தமிழ்மாலை
    கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங்
    குற்றங்கள் குறுகாவே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - காளகண்டேசுவரர்,
    தேவியார் - பட்சநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்