MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.105 திருக்கீழ்வேளூர்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1136 மின்னு லாவிய சடையினர் விடையினர்
    மிளிர்தரும் அரவோடும்
    பன்னு லாவிய மறைஒலி நாவினர்
    கறையணி கண்டத்தர்
    பொன்னு லாவிய கொன்றையந் தாரினர்
    புகழ்மிகு கீழ்வேளூர்
    உன்னு லாவிய சிந்தையர் மேல்வினை
    யோடிட வீடாமே. 01
    1137 நீரு லாவிய சடையிடை யரவொடு
    மதிசிர நிரைமாலை
    வாரு லாவிய வனமுலை யவளொடு
    மணிசிலம் பவையார்க்க
    ஏரு லாவிய இறைவன துறைவிடம்
    எழில்திகழ் கீழ்வேளூர்
    சீரு லாவிய சிந்தைசெய் தணைபவர்
    பிணியொடு வினைபோமே. 02
    1138 வெண்ணி லாமிகு விரிசடை யரவொடு
    வெள்ளெருக் கலர்மத்தம்
    பண்ணி லாவிய பாடலோ டாடலர்
    பயில்வுறு கீழ்வேளூர்ப்
    பெண்ணி லாவிய பாகனைப் பெருந்திருக்
    கோயிலெம் பெருமானை
    உண்ணி லாவிநின் றுள்கிய சிந்தையார்
    உலகினில் உள்ளாரே. 03
    1139 சேடு லாவிய கங்கையைச் சடையிடைத்
    தொங்கவைத் தழகாக
    நாடு லாவிய பலிகொளும் நாதனார்
    நலமிகு கீழ்வேளூர்ப்
    பீடு லாவிய பெருமையர் பெருந்திருக்
    கோயிலுட் பிரியாது
    நீடு லாவிய நிமலனைப் பணிபவர்
    நிலைமிகப் பெறுவாரே. 04
    1140 துன்று வார்சடைச் சுடர்மதி நகுதலை
    வடமணி சிரமாலை
    மன்று லாவிய மாதவ ரினிதியன்
    மணமிகு கீழ்வேளூர்
    நின்று நீடிய பெருந்திருக் கோயிலின்
    நிமலனை நினைவோடுஞ்
    சென்று லாவிநின் றேத்தவல் லார்வினை
    தேய்வது திணமாமே. 05
    1141 கொத்து லாவிய குழல்திகழ் சடையனைக்
    கூத்தனை மகிழ்ந்துள்கித்
    தொத்து லாவிய நூலணி மார்பினர்
    தொழுதெழு கீழ்வேளூர்ப்
    பித்து லாவிய பத்தர்கள் பேணிய
    பெருந்திருக் கோயில்மன்னும்
    முத்து லாவிய வித்தினை யேத்துமின்
    முடுகிய இடர்போமே. 06
    1142 பிறைநி லாவிய சடையிடைப் பின்னலும்
    வன்னியுந் துன்னாரும்
    கறைநி லாவிய கண்டரெண் டோ ளினர்
    காதல்செய் கீழ்வேளூர்
    மறைநி லாவிய அந்தணர் மலிதரு
    பெருந்திருக் கோயில்மன்னும்
    நிறைநி லாவிய ஈசனை நேசத்தால்
    நினைபவர் வினைபோமே. 07
    1143 மலைநி லாவிய மைந்தனம் மலையினை
    யெடுத்தலும் அரக்கன்றன்
    தலையெ லாம்நெரிந் தலறிட வூன்றினான்
    உறைதரு கீழ்வேளூர்க்
    கலைநி லாவிய நாவினர் காதல்செய்
    பெருந்திருக் கோயிலுள்
    நிலைநி லாவிய ஈசனை நேசத்தால்
    நினையவல் வினைபோமே. 08
    1144 மஞ்சு லாவிய கடல்கிடந் தவனொடு
    மலரவன் காண்பொண்ணாப்
    பஞ்சு லாவிய மெல்லடிப் பார்ப்பதி
    பாகனைப் பரிவோடுஞ்
    செஞ்சொ லார்பலர் பரவிய தொல்புகழ்
    மல்கிய கீழ்வேளூர்
    நஞ்சு லாவிய கண்டனை நணுகுமின்
    நடலைகள் நணுகாவே. 09
    1145 சீறு லாவிய தலையினர் நிலையிலா
    அமணர்கள் சீவரத்தார்
    வீறி லாதவெஞ் சொற்பல விரும்பன்மின்
    சுரும்பமர் கீழ்வேளூர்
    ஏறு லாவிய கொடியனை யேதமில்
    பெருந்திருக் கோயில்மன்னு
    பேறு லாவிய பெருமையன் திருவடி
    பேணுமின் தவமாமே. 10
    1146 குருண்ட வார்குழற் சடையுடைக் குழகனை
    அழகமர் கீழ்வேளூர்த்
    திரண்ட மாமறை யவர்தொழும் பெருந்திருக்
    கோயிலெம் பெருமானை
    இருண்ட மேதியின் இனமிகு வயல்மல்கு
    புகலிமன் சம்பந்தன்
    தெருண்ட பாடல்வல் லாரவர் சிவகதி
    பெறுவது திடமாமே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அட்சயலிங்கநாதர், தேவியார் - வனமுலைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்