MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.106 திருவலஞ்சுழி
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1147 என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
    யிருங்கடல் வையத்து
    முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
    முழுமணித் தரளங்கள்
    மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
    வாணனை வாயாரப்
    பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
    வழிபடும் அதனாலே. 01
    1148 விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
    விரிகடல் வருநஞ்சம்
    உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
    இறைவனை உலகத்தில்
    வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை
    வலஞ்சுழி யிடமாகக்
    கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ
    டினிதிருந் தமையாலே. 02
    1149 திருந்த லார்புரந் தீயெழச் செறுவன
    விறலின்கண் அடியாரைப்
    பரிந்து காப்பன பத்தியில் வருவன
    மத்தமாம் பிணிநோய்க்கு
    மருந்து மாவன மந்திர மாவன
    வலஞ்சுழி யிடமாக
    இருந்த நாயகன் இமையவ ரேத்திய
    இணையடித் தலந்தானே. 03
    1150 கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
    அறத்திற முனிவர்க்கன்
    றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந்
    தினிதருள் பெருமானார்
    மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
    யிடமகிழ்ந் தருங்கானத்
    தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
    அற்புதம் அறியோமே. 04
    1151 மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்
    எரியுரு வொருபாகம்
    பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர்
    பெருங்கடற் பவளம்போல்
    வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
    பரிபவர் மனம்புக்க
    எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
    இணையடி தொழுவாரே. 05
    1152 ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
    மேனியர் மடமாதர்
    இருவ ராதரிப் பார்பல பூதமும்
    பேய்களும் அடையாளம்
    அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்
    தகந்தொறும் பலிக்கென்று
    வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
    வரிவளை கவர்ந்தாரே. 06
    1153 குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
    குலவிய நெய்த்தானம்
    என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர்
    இமையவர் பணிகேட்பார்
    அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம்
    வலஞ்சுழி யரனார்பால்
    சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
    சேயிழை தளர்வாமே. 07
    1154 குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
    குலவரைப் பரப்பாய
    கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி
    தோளிரு பதுமூன்றி
    மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
    வலஞ்சுழி யெம்மானைப்
    பயில வல்லவர் பரகதி காண்பவர்
    அல்லவர் காணாரே. 08
    1155 அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
    அரவணைத் துயின்றானுங்
    கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
    மாண்பமர் தடக்கையில்
    மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
    வலங்கொடு பாதத்தால்
    சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
    துன்பங்கள் களைவாரே. 09
    1156 அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
    தவம்புரிந் தவஞ்செய்வார்
    நெறிய லாதன கூறுவர் மற்றவை
    தேறன்மின் மாறாநீர்
    மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
    மருவிய பெருமானைப்
    பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்
    அளவறுப் பொண்ணாதே. 10
    1157 மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
    மருந்தினை வயற்காழி
    நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
    நவிற்றிய தமிழ்மாலை
    ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக்
    கேட்டுகந் தவர்தம்மை
    வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
    வருத்தம்வந் தடையாவே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சித்தீசநாதர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்