MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.107 திருக்கேதீச்சரம்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1158 விருது குன்றமா மேருவில் நாணர
    வாவனல் எரியம்பாப்
    பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின்
    றுறைபதி யெந்நாளுங்
    கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
    பொழிலணி மாதோட்டங்
    கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
    கடுவினை யடையாவே. 01
    1159 பாடல் வீணையர் பலபல சரிதையர்
    எருதுகைத் தருநட்டம்
    ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்
    சுண்டிருள் கண்டத்தர்
    ஈட மாவது இருங்கடற் கரையினில்
    எழில்திகழ் மாதோட்டம்
    கேடி லாதகே தீச்சரங் கைதொழக்
    கெடுமிடர் வினைதானே. 02
    1160 பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர்
    அறைகழல் சிலம்பார்க்கச்
    சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர்
    அகந்தொறும் இடுபிச்சைக்
    குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர்
    உயர்தரு மாதோட்டத்
    தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க்
    கருவினை யடையாவே. 03
    1161 பொடிகொள் மேனியர் புலியத ளரையினர்
    விரிதரு கரத்தேந்தும்
    வடிகொள் மூவிலை வேலினர் நூலினர்
    மறிகடல் மாதோட்டத்
    தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம்
    பரிந்தசிந் தையராகி
    முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல்
    மொய்த்தெழும் வினைபோமே. 04
    1162 நல்ல ராற்றவும் ஞானநன் குடையர்தம்
    மடைந்தவர்க் கருளீய
    வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர்
    மலிகடல் மாதோட்டத்
    தெல்லை யில்புகழ் எந்தைகே தீச்சரம்
    இராப்பகல் நினைந்தேத்தி
    அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும்
    அன்பராம் அடியாரே. 05
    1163 பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப்
    பொருந்தவைத் தொருபாகம்
    மாழை யங்கயற் கண்ணிபா லருளிய
    பொருளினர் குடிவாழ்க்கை
    வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற
    மருவிய மாதோட்டக்
    கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே
    தீச்சரம் பிரியாரே. 06
    1164 பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல்
    லுலகினில் உயிர்வாழ்க்கை
    கண்ட நாதனார் கடலிடங் கைதொழக்
    காதலித் துறைகோயில்
    வண்டு பண்செயு மாமலர்ப் பொழில்மஞ்ஞை
    நடமிடு மாதோட்டந்
    தொண்டர் நாடொறுந் துதிசெய அருள்செய்கே
    தீச்சர மதுதானே. 07
    1165 தென்னி லங்கையர் குலபதி மலைநலிந்
    தெடுத்தவன் முடிதிண்டோ ள்
    தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த
    தலைவனார் கடல்வாயப்
    பொன்னி லங்கிய முத்துமா மணிகளும்
    பொருந்திய மாதோட்டத்
    துன்னி யன்பொடும் அடியவ ரிறைஞ்சுகே
    தீச்சரத் துள்ளாரே. 08
    1166 பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும்
    புவியிடந் தெழுந்தோடி
    மேவி நாடிநின் அடியிணை காண்கிலா
    வித்தக மென்னாகும்
    மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா
    தோட்டநன் னகர்மன்னித்
    தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத்
    திருந்தஎம் பெருமானே. 09
    1167 புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர்
    புறனுரைச் சமணாதர்
    எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய
    ஏழைமை கேலேன்மின்
    மத்த யானையை மறுகிட உரிசெய்து
    போர்த்தவர் மாதோட்டத்
    தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே
    தீச்சரம் அடைமின்னே. 10
    1168 மாடெ லாமண முரசெனக் கடலின
    தொலிகவர் மாதோட்டத்
    தாட லேறுடை அண்ணல்கே தீச்சரத்
    தடிகளை யணிகாழி
    நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல்
    நவின்றெழு பாமாலைப்
    பாட லாயின பாடுமின் பத்தர்காள்
    பரகதி பெறலாமே. 11
    இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கேதீச்சுவரர், தேவியார் - கௌரிநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்