2.108 திருவிற்குடிவீரட்டானம்
பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
1169 வடிகொள் மேனியர் வானமா மதியினர்
நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை
விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
அருவினை யடையாவே. 01
1170 களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங்
கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர்
பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை
விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார்
வருத்தம தறியாரே. 02
1171 கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி
மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்
தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி
விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப்
பேணுவ ருலகத்தே. 03
1172 பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு
கடலெழு விடமுண்டார்
வேத மோதிய நாவுடை யானிடம்
விற்குடி வீரட்டஞ்
சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி
தீவினை கெடுமாறே. 04
1173 கடிய ஏற்றினர் கனலன மேனியர்
அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன
தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை
விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற்
பற்றறும் அருநோயே. 05
1174 பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக்
கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்
அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி
விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்
கிடர்கள்வந் தடையாவே. 06
இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 07
1175 இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை
யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு
பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி
விற்குடி வீரட்டந்
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்
துன்பநோ யடையாவே. 08
1176 செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந்
திருவடி யறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை
யறைபுனல் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன்
விற்குடி வீரட்டந்
தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர்
தவமல்கு குணத்தாரே. 09
1177 பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ
ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின்
பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்
விற்குடி வீரட்டங்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர்
கருத்துறுங் குணத்தாரே. 10
1178 விலங்க லேசிலை யிடமென வுடையவன்
விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை
யெழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம்
பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால்
மற்றது வரமாமே. 11
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - மைவார்குழலியம்மை.
திருச்சிற்றம்பலம்