MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.109 திருக்கோட்டூர்
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1179 நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
    கண்ணனே ஒற்றைவிடைச்
    சூல மார்தரு கையனே துன்றுபைம்
    பொழில்கள்சூழ்ந் தழகாய
    கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத்
    தாங்குவர் பாங்காலே. 01
    1180 பங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு
    மெல்விர லரவல்குல்
    மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென
    மிழற்றிய மொழியார்மென்
    கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு
    அருள்பெறல் எளிதாமே. 02
    1181 நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்
    அடியவர் தமக்கெல்லாஞ்
    செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்
    செல்வமல் கியநல்ல
    கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    அம்பொ னார்தரு முலகினில் அமரரோ
    டமர்ந்தினி திருப்பாரே. 03
    1182 பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
    மாங்கனி பயில்வாய
    கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்
    அன்னஞ்சேர்ந் தழகாய
    குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
    நீடிய புகழாரே. 04
    1183 உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்
    அன்பராம் அடியார்கள்
    பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு
    பத்திசெய் தெத்திசையுங்
    குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
    அவனருள் பெறலாமே. 05
    1184 துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்
    துன்னெருக் கார்வன்னி
    பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
    புலியுரி யுடையாடை
    கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவாரை
    என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை
    ஏதம்வந் தடையாவே. 06
    1185 மாட மாளிகை கோபுரங் கூடங்கள்
    மணியரங் கணிசாலை
    பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம்
    பரிசொடு பயில்வாய
    கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    கேட தொன்றில ராகிநல் லுலகினிற்
    கெழுவுவர் புகழாலே. 07
    1186 ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை
    யெடுத்தலும் உமையஞ்சிச்
    சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு
    நாளவற் கருள்செய்த
    குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
    கொழுந்தினைத் தொழுவார்கள்
    தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந்
    தவமுடை யவர்தாமே. 08
    1187 பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும்
    முத்தினைப் பவளத்தைத்
    தேடி மாலயன் காணவொண் ணாதவத்
    திருவினைத் தெரிவைமார்
    கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில்
    நிகழ்தரு புகழாரே. 09
    1188 கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்
    கொழுந்தினைச் செழுந்திரளைப்
    பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா
    மெய்யன்நல் லருளென்றுங்
    காண லொன்றிலாக் காரமண் தேரர்குண்
    டாக்கர்சொற் கருதாதே
    பேணல் செய்தர னைத்தொழும் அடியவர்
    பெருமையைப் பெறுவாரே. 10
    1189 பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப்
    பாவையோ டுருவாருங்
    கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற்
    கொழுந்தினைச் செழும்பவளம்
    வந்து லாவிய காழியுள் ஞானசம்
    பந்தன்வாய்ந் துரைசெய்த
    சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர்
    தாங்குவர் புகழாலே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கொழுந்தீசுவரர், தேவியார் - தேன்மொழிப்பாவையம்மை.

    திருச்சிற்றம்பலம்