MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.110 திருமாந்துறை
    பண் - நட்டராகம்
    திருச்சிற்றம்பலம்

    1190 செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ்
    செருந்திசெண் பகமானைக்
    கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
    குருந்தலர் பரந்துந்தி
    அம்பொன் நேர்வரு காவிரி வடகரை
    மாந்துறை யுறைகின்ற
    எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ
    லேத்துதல் செய்வோமே. 01
    1191 விளவு தேனொடு சாதியின் பலங்களும்
    வேய்மணி நிரந்துந்தி
    அளவி நீர்வரு காவிரி வடகரை
    மாந்துறை உறைவானத்
    துளவ மால்மக னைங்கணைக் காமனைச்
    சுடவிழித் தவனெற்றி
    அளக வாணுதல் அரிவைதன் பங்கனை
    யன்றிமற் றறியோமே. 02
    1192 கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமுங்
    கூந்தலின் குலைவாரி
    ஓடு நீர்வரு காவிரி வடகரை
    மாந்துறை யுறைநம்பன்
    வாடி னார்தலை யிற்பலி கொள்பவன்
    வானவர் மகிழ்ந்தேத்துங்
    கேடி லாமணி யைத்தொழ லல்லது
    கெழுமுதல் அறியோமே. 03
    1193 இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை
    இளமரு திலவங்கங்
    கலவி நீர்வரு காவிரி வடகரை
    மாந்துறை யுறைகண்டன்
    அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும்
    ஆடர வுடன்வைத்த
    மலையை வானவர் கொழுந்தினை யல்லது
    வணங்குதல் அறியோமே. 04
    1194 கோங்கு செண்பகங் குருந்தொடு பாதிரி
    குரவிடை மலருந்தி
    ஓங்கி நீர்வரு காவிரி வடகரை
    மாந்துறை யுறைவானைப்
    பாங்கி னாலிடுந் தூபமுந் தீபமும்
    பாட்டவி மலர்சேர்த்தித்
    தாங்கு வாரவர் நாமங்கள் நாவினில்
    தலைப்படுந் தவத்தோரே. 05
    1195 பெருகு சந்தனங் காரகில் பீலியும்
    பெருமரம் நிமிர்ந்துந்திப்
    பொருது காவிரி வடகரை மாந்துறைப்
    புனிதனெம் பெருமானைப்
    பரிவி னாலிருந் திரவியும் மதியமும்
    பார்மன்னர் பணிந்தேத்த
    மருத வானவர் வழிபடு மலரடி
    வணங்குதல் செய்வோமே. 06
    1196 நறவ மல்லிகை முல்லையும் மௌவலும்
    நாண்மல ரவைவாரி
    இறவில் வந்தெறி காவிரி வடகரை
    மாந்துறை யிறைஅன்றங்
    கறவ னாகிய கூற்றினைச் சாடிய
    அந்தணன் வரைவில்லால்
    நிறைய வாங்கி வலித்தெயி லெய்தவன்
    நிரைகழல் பணிவோமே. 07
    1197 மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட
    மந்திகள் மாணிக்கம்
    உந்தி நீர்வரு காவிரி வடகரை
    மாந்துறை யுறைவானை
    நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை
    நெரித்திடு விரலானைச்
    சிந்தி யாமனத் தாரவர் சேர்வது
    தீநெறி யதுதானே. 08
    1198 நீல மாமணி நித்திலத் தொத்தொடு
    நிரைமலர் நிரந்துந்தி
    ஆலி யாவரு காவிரி வடகரை
    மாந்துறை யமர்வானை
    மாலு நான்முகன் தேடியுங் காண்கிலா
    மலரடி யிணைநாளுங்
    கோல மேத்திநின் றாடுமின் பாடுமின்
    கூற்றுவன் நலியானே. 09
    1199 நின்று ணுஞ்சமண் தேரரும் நிலையிலர்
    நெடுங்கழை நறவேலம்
    நன்று மாங்கனி கதலியின் பலங்களும்
    நாணலின் நுரைவாரி
    ஒன்றி நேர்வரு காவிரி வடகரை
    மாந்துறை யொருகாலம்
    அன்றி யுள்ளழிந் தெழும்பரி சழகிது
    அதுவவர்க் கிடமாமே. 10
    1200 வரைவ ளங்கவர் காவிரி வடகரை
    மாந்துறை யுறைவானைச்
    சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன்
    செழுமறை நிறைநாவன்
    அரவெ னும்பணி வல்லவன் ஞானசம்
    பந்தனன் புறுமாலை
    பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும்
    பாவமும் இலர்தாமே. 11
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஐராவணேசுவரர், தேவியார் - அழகாயமர்ந்தநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்