MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.114 திருக்கேதாரம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1234 தொண்டரஞ்சுங் களிறு மடக்கிச் சுரும்பார்மலர்
    இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால்
    வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
    கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே. 01
    1235 பாதம்விண் ணோர்பலரும் பரவிப்பணிந் தேத்தவே
    வேதநான்கும் பதினெட்டொ டாறும்விரித் தார்க்கிடந்
    தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினங்
    கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே. 02
    1236 முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர்
    எந்தைபெம்மா னெனநின் றிறைஞ்சுமிட மென்பரால்
    மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்
    கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே. 03
    1237 உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு காலர்கள்
    எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால்
    பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோய்க்
    கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே. 04
    1238 ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்
    வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால்
    மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய
    கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே. 05
    1239 நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கிநீள் வரைதன்மேல்
    தேறுசிந்தை யுடையார்கள் சேரும்மிட மென்பரால்
    ஏறிமாவின் கனியும்பலா வின்னிருஞ் சுளைகளுங்
    கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே. 06
    1240 மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத்
    தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கிட மென்பரால்
    உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறைகண்மேல்
    கிடந்தவேங்கை சினமா முகஞ்செய்யுங் கேதாரமே. 07
    1241 அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
    வெருவவூன்றி விரலாலடர்த் தார்க்கிட மென்பரால்
    குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
    கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே. 08
    1242 ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல மந்தவர்
    தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால்
    வீழ்ந்துசெற்றுந் நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக்
    கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே. 09
    1243 கடுக்கள்தின்று கழிமீன்கவர் வார்கள் மாசுடம்பினர்
    இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணாவிட மென்பரால்
    அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக்
    கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே. 10
    1244 வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
    ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை
    ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்
    வேந்தராகி யுலகாண்டு வீடு கதிபெறுவரே. 11
    இத்தலம் வடதேசத்திலுள்ளது.
    சுவாமிபெயர் - கேதாரேசுவரர்,
    தேவியார் - கௌரியம்மை.

    திருச்சிற்றம்பலம்