MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.117 திரு இரும்பைமாகாளம்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1267 மண்டுகங்கை சடையிற் கரந்தும் மதிசூடிமான்
    கொண்டகையாற் புரம்மூன் றெரித்த குழகன்னிடம்
    எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
    வண்டுகீதம் முரல்பொழில் சுலாய்நின்ற மாகாளமே. 01
    1268 வேதவித்தாய வெள்ளைநீறு பூசி வினையாயின
    கோதுவித்தாய நீறெழக் கொடிமா மதிலாயின
    ஏதவித்தா யினதீர்க் கும்மிடம் மிரும்பைதனுள்
    மாதவத்தோர் மறையோர் தொழநின்ற மாகாளமே. 02
    1269 வெந்தநீறு மெலும்பும் மணிந்த விடையூர்தியான்
    எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை இரும்பைதனுள்
    கந்தமாய பலவின் கனிகள் கமழும்பொழில்
    மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே. 03
    1270 நஞ்சுகண்டத் தடக்கி நடுங்கும் மலையான்மகள்
    அஞ்சவேழம் உரித்த பெருமான் அமரும்மிடம்
    எஞ்சலில்லாப் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
    மஞ்சிலோங்கும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. 04
    1271 பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பன்மகள்
    கூசஆனை உரித்த பெருமான் குறைவெண்மதி
    ஈசனெங்கள் ளிறைவன் னிடம்போல் இரும்பைதனுள்
    மாசிலோர்கண் மலர்கொண் டணிகின்ற மாகாளமே. 05
    1272 குறைவதாய குளிர்திங்கள் சூடிக் குனித்தான்வினை
    பறைவதாக்கும் பரமன் பகவன் பரந்தசடை
    இறைவனெங்கள் பெருமான் இடம்போல் இரும்பைதனுள்
    மறைகள்வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே. 06
    1273 பொங்குசெங்கண் ணரவும் மதியும் புரிபுன்சடைத்
    தங்கவைத்த பெருமா னெனநின் றவர்தாழ்விடம்
    எங்குமிச்சை யமர்ந்தான் இடம்போல் இரும்பைதனுள்
    மங்குல்தோயும் பொழில்சூழ்ந் தழகாய மாகாளமே. 07
    1274 நட்டத்தோடு நரியாடு கானத் தெரியாடுவான்
    அட்டமூர்த்தி அழல்போ லுருவன் னழகாகவே
    இட்டமாக இருக்கும் மிடம்போல் இரும்பைதனுள்
    வட்டஞ்சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே. 08
    1275 அட்டகாலன் றனைவவ்வி னானவ் வரக்கன்முடி
    எட்டுமற்றும் இருபத் திரண்டும் மிறவூன்றினான்
    இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
    மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரு மாகாளமே. 09
    1276 அரவமார்த்தன் றனலங்கை யேந்தி யடியும்முடி
    பிரமன்மாலும் மறியாமை நின்ற பெரியோனிடங்
    குரவமாரும் பொழிற்குயில்கள் சேரும் மிரும்பைதனுள்
    மருவிவானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே. 10
    1277 எந்தைபெம்மா னிடமெழில்கொள் சோலை யிரும்பைதனுள்
    மந்தமாய பொழில்சூழ்ந் தழகாரு மாகாளத்தில்
    அந்தமில்லா அனலாடு வானை யணிஞானசம்
    பந்தன்சொன்ன தமிழ்பாட வல்லார் பழிபோகுமே. 11
    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாகாளேசுவரர், தேவியார் - குயிலம்மை.

    திருச்சிற்றம்பலம்