MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.121 திருப்பாதிரிப்புலியூர்
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1311 முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்
    புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
    தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
    பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே. 01
    1312 கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
    முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்
    புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனை
    உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே. 02
    1313 மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
    பொருளினல்லார் பயில்பா திரிப்புலி யூருளான்
    வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின்
    அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே. 03
    1314 போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம்
    போதினாலே வழிபாடு செய்யப் புலியூர்தனுள்
    ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை
    ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே. 04
    1315 ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை
    நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்
    போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி யூர்தனுள்
    பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே. 05
    1316 மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்
    புதியமுத்தந் திகழ்பா திரிப்புலி யூரெனும்
    பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்
    குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே. 06
    1317 கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்
    சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்
    பொங்கரவம் முயர்பா திரிப்புலி யூர்தனுள்
    அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே. 07
    1318 வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடை
    ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை யூன்றினான்
    பூக்கமழும் புனல்பா திரிப்புலி யூர்தனை
    நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே. 08
    1319 அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை
    பொன்னந்தாது சொரிபா திரிப்புலி யூர்தனுள்
    முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்
    தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே. 09
    1320 உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
    திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
    எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
    புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே. 10
    1321 அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்
    பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி யூர்தனுள்
    சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல்
    வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே. 11
    இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தோன்றாத்துணையீசுவரர், தேவியார் - தோகையம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்