MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    2.122 திருப்புகலி
    பண் - செவ்வழி
    திருச்சிற்றம்பலம்

    1322 விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார்
    படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது
    கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம்
    புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே. 01
    1323 வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்
    ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது
    சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
    சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே. 02
    1324 வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித்
    துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது
    கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி
    புண்டரீக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே. 03
    1325 திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க்
    கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது
    பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற்
    புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே. 04
    1326 ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர்
    நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது
    மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப்
    பூவிலாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே. 05
    1327 தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
    ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது
    கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
    புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே. 06
    இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. 07
    1328 தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன்
    தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது
    கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்
    பொலியுமந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே. 08
    1329 கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க்
    காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது
    நீண்டநாரை இரையாரல் வாரநிறை செறுவினிற்
    பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே. 09
    1330 தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
    இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது
    மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
    அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே. 10
    1331 எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக்
    கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர்
    செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில்
    எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே. 11

    திருச்சிற்றம்பலம்

    திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த
    தேவாரப் பதிகங்கள் இரண்டாம் திருமுறை முற்றும்.


    பண் - 24. அவை,

    பகற் பண் :
    புறநீர்மை, காந்தாரம், பியந்தைக்காந்தாரம்,
    கவுசிகம், இந்தளம், தக்கேசி, சாதாரி, நட்டபாஷை,
    நட்டராகம், பழம்பஞ்சுரம், காந்தாரபஞ்சமம், பஞ்சமம். ஆக பகற்பண் - 12.

    இராப்பண் :
    தக்கராகம், பழந்தக்கராகம், சீகாமரம், கொல்லி,
    கொல்லிக்காவாணம், வியாழக்குறிஞ்சி, மேகராகக்குறிஞ்சி,
    அந்தாளிக்குறிஞ்சி, குறிஞ்சி. ஆக இராப்பண் - 9

    பொதுப்பண் :
    செவ்வழி, செந்துருதி, திருத்தாண்டகம். ஆக பொதுப்பண் – 3