MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    41. அற்புதப்பத்து - அனுபவமாற்றாமை
    (திருப்பெருந்துறையில் அருளியது - அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

    மைய லாய்இந்த மண்ணிடை வாழ்வெனும் ஆழியு ளகப்பட்டுத்
    தைய லாரெனுஞ் சுழித்தலைப் பட்டுநான் தலைதடு மாறாமே
    பொய்யெ லாம்விடத் திருவருள் தந்துதன் பொன்னடி யினைகாட்டி
    மெய்ய னாய்வெளி காட்டிமுன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 569

    ஏய்ந்த மாமல ரிட்டுமுட் டாததோர் இயல்பொடும் வணங்காதே
    சாந்த மார்முலைத் தையல்நல் லாரொடுந் தலைதடு மாறாகிப்
    போந்து யான்துயர் புகாவணம் அருள்செய்து பொற்கழலி னைகாட்டி
    வேந்த னாம்வெளியே என்முன் நின்றதோர் அற்புதம் விளம்பேனே. 570

    நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து நானென தெனும்மாயக்
    கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக் கழறியே திரிவேனைப்
    பிடித்து முன்னின்றப் பெருமறை தேடிய அரும்பொருள் அடியேனை
    அடித்த டித்துஅக் காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே. 571

    பொருந்தும் இப்பிறப் பிறப்பிவை நினையாது பொய்களே புகன்றுபோய்க்
    கருங் குழலினனார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத்
    திருந்து சேவடிச் சிலம்பனை சிலம்பிடத் திருவொடும் அகலாத
    அருந்து ணைவனாய் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியனே. 572

    மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும் மங்கையர் தம்மோடுங்
    கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவிய திரிவேனை
    வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி
    ஆடு வித்தென தகம்புகுந் தாண்டதோர் அற்புதம் அறியேனே. 573

    வணங்கும் இப்பிறப் பிறப்பிவை நினையாது மங்கையர் தம்மோடும்
    பிணைந்து வாயிதழ்ப் பொருவெள்ளத் தழுந்திநான் பித்தனாய்த் திரிவேனைக்
    குணங்க ளுங்குறி களுமிலாக் குணக்கடல் கோமளத் தொடுங்கூடி
    அணைந்து வந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 574

    இப்பி றப்பினில் இணைமலர் கொய்துநான் இயல்பொடஞ் செழுத்தோதித்
    தப்பி லாதுபொற் கழல்களுக் கிடாதுநான் தடமுலை யார்தங்கள்
    மைப்பு லாங்கண்ணால் ஏறுண்டு கிடப்பேனை மலரடி யிணைகாட்டி
    அப்பன் என்னைவந் தாண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 575

    ஊச லாட்டுமிவ் வுடலுயி ராயின இருவினை அறுத்தென்னை
    ஓசையா லுணர் வார்க்குணர் வரியவன் உணர்வுதந் தொளிவாக்கிப்
    பாச மானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பொருங் கருணையால்
    ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புதம் அறியேனே. 576

    பொச்சை யானஇப் பிறவியிற் கிடந்துநான் புழுத்தலை நாய்போல
    இச்சை யாயின ஏழையர்க் கேசெய்தங் கிணங்கியே திரிவேனை
    இச்ச கத்தரி அயனுமெட் டாததன் விரைமலர்க் கழல்காட்டி
    அச்சன் என்னையும் ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 577

    செறியும் இப்பிறவிப் பிறப்பிவை நினையாது செறிகுழலார் செய்யுங்
    கிறியுங் கீழ்மையுங் கெண்டையங் கண்களும் உன்னியே கிடப்பேனை
    இறைவன் எம்பிரான் எல்லையில் லாததன் இணைமலர்க் கழல்காட்டி
    அறிவு தந்தெனை ஆண்டுகொண் டருளிய அற்புதம் அறியேனே. 578

    திருச்சிற்றம்பலம்