MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    திருக்குறும்பலாப்பதிகம் - திருஞானசம்பந்த சுவாமிகள்

    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம்
    பொருந்திப் பொருந்தாத வேடத்தால் காடுறைதல் புரிந்தசெல்வர்
    இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின வண்டியாழ்செய்
    குருந்த மணநாறும் குன்றிடஞ்சூழ் தட்சாரற் குறும்பலாவே ..1

    நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பானம்மை
    ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தட்சாரல்
    கீட்பலவுங் கீண்டுகிளை கிளையன் மந்திபாய்ந் துண்டுவிண்ட
    கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்பலாவே ..2

    வாடற் றலைமாலை சூடிப் புலித்தோல் வலித்துவீக்கி
    ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தட்சாரல்
    பாடற் பெடைவண்டு போதலர்த்தத் தாதவிழ்ந்து பசும்பொனுந்திக்
    கோடல் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தட்சாரற் குறும்பலாவே ..3

    பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடியாடிக்
    கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலும் கல்சூழ்வெற்பில்
    நீல மலர்க்குவளை கண்டிறக்க வண்டற்று நெடுந்தட்சாரல்
    கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்பலாவே ..4

    தலைவாண் மதியம் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித்தேவி
    முலைபா கங்காத லித்தமூர்த்தி யிடம்போலு முதுவேய்சூழ்ந்த
    மலைவா யசும்பு பசும்பொன் கொழித்திழியு மல்குசாரல்
    குலைவா ழைத்தீங் கனியுந் தேன்பிலிற்றும் குறும்பலாவே ..5

    நீற்றேது தைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக்கண்ணர்
    கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலும் குளிர்சூழ்வெற்பில்
    ஏற்றே னமேன மிவையோ டவைவிரவி யிழிபூஞ்சாரல்
    கோற்றே னிசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்பலாவே ..6

    பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலும்சூடிப்
    பின்றொத்த வார்சடைஎம் பெம்மா னிடம்போலும் பிலையந்தாங்கி
    மன்றத்து மண்முழவ மோங்கி மணிகொழித்து வயிரமுந்திக்
    குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்பலாவே ..7

    ஏந்துதிணி திண்டோ ளிராவணனை மால்வரைக்கீ ழடரவூன்றிச்
    சாந்தமென நீறணிந் தசைவ ரிடம்போலும் சாரற்சாரற்
    பூந்தணறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் பொலியவேந்திக்
    கூந்தல் பிடியுங் களிறு முடன்வணங்கும் குறும்பலாவே ..8

    அரவி னணையானு நான்முகனும் காண்பரிய அண்ணல்சென்னி
    விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ்சாரல்
    மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு மலர்ந்துமாந்தக்
    குரவமுறு வல்செய்யும் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே ..9

    மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூறுண்டு
    காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலும் கல்சூழ்வெற்பில்
    நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ்செய்யக்
    கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்கும் குறும்பலாவே ..10

    கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற்றண்ணல்
    நம்பா னடிபரவு நான்மறையான் ஞானசம் பந்தன்சொன்ன
    இன்பாய பாடலிவை பத்தும் வல்லார் விரும்பிக்கேட்பார்
    நம்பால தீவினைகள் போயகலு நல்வினைகள் தளராவன்றே ..11
    திருச்சிற்றம்பலம்