MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  



    1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்
    வினாவுரை

    பண் - நட்டபாடை

    55 அங்கமும் வேதமும் ஓதுநாவர்
    அந்தணர் நாளும் அடிபரவ
    மங்குல் மதிதவழ் மாடவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    செங்கய லார்புனற் செல்வமல்கு
    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
    கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.1
    56 நெய்தவழ் மூவெரி காவலோம்பும்
    நேர்புரி நூன்மறை யாளரேத்த
    மைதவழ் மாட மலிந்தவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்
    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
    கைதவழ் கூரெரி யேந்தியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.2
    57 தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்
    தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ
    மால்புகை போய்விம்மு மாடவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த
    சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
    கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.3
    58 நாமரு கேள்வியர் வேள்வியோவா
    நான்மறை யோர்வழி பாடுசெய்ய
    மாமரு வும்மணிக் கோயில்மேய
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.4
    59 பாடல் முழவும் விழவும்ஓவாப்
    பன்மறை யோரவர் தாம்பரவ
    மாட நெடுங்கொடி விண்தடவும்
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    காடக மேயிட மாகஆடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.5
    60 புனையழ லோம்புகை அந்தணாளர்
    பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப
    மனைகெழு மாட மலிந்தவீதி
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.6
    60 இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 1.6.7
    61 பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்
    பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து
    மாண்டங்கு நூன்மறை யோர்பரவ
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.8
    62 அந்தமும் ஆதியும் நான்முகனும்
    அரவணை யானும் அறிவரிய
    மந்திர வேதங்க ளோதுநாவர்
    மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
    செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    கந்தம் அகிற்புகை யேகமழுங்
    கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.9
    63 இலைமரு தேயழ காகநாளும்
    இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்
    நிலையமண் டேரரை நீங்கிநின்று
    நீதரல் லார்தொழும் மாமருகல்
    மலைமகள் தோள்புணர் வாயருளாய்
    மாசில்செங் காட்டங் குடியதனுள்
    கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்
    கணபதி யீச்சரங் காமுறவே. 1.6.10
    64 நாலுங் குலைக்கமு கோங்குகாழி
    ஞானசம் பந்தன் நலந்திகழும்
    மாலின் மதிதவழ் மாடமோங்கும்
    மருகலின் மற்றதன் மேல்மொழிந்த
    சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்
    சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
    சூலம்வல் லான்கழ லேத்துபாடல்
    சொல்லவல் லார்வினை யில்லையாமே. 1.6.11

    இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.
    திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்; தேவியார் - வண்டுவார்குழலி
    திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்,
    தேவியார் - திருக்குழல்நாயகி.