MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்
    வினாவுரை

    பண் - நட்டபாடை

    65 பாடக மெல்லடிப் பாவையோடும்
    படுபிணக் காடிடம் பற்றிநின்று
    நாடக மாடுநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    சூடக முன்கை மடந்தைமார்கள்
    துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த
    ஆடக மாடம் நெருங்குகூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.1
    66 திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்
    செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து
    நங்கள் மகிழுநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    பொங்கிள மென்முலை யார்களோடும்
    புனமயி லாட நிலாமுளைக்கும்
    அங்கள கச்சுதை மாடக்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.2
    67 தண்ணறு மத்தமுங் கூவிளமும்
    வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்
    நண்ணல் அரியநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    புண்ணிய வாணரும் மாதவரும்
    புகுந்துட னேத்தப் புனையிழையார்
    அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.3
    68 பூவினில் வாசம் புனலிற்பொற்பு
    புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு
    நாவினிற் பாடநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    தேவர்கள் தானவர் சித்தர்விச்சா
    தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி
    ()ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
    () ஆவினிலைந்து - பஞ்சகவ்வியம். 1.7.4
    69 செம்பொன்செய் மாலையும் வாசிகையுந்
    திருந்து புகையு மவியும்பாட்டும்
    நம்பும்பெ ருமைநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    உம்பரும் நாக ருலகந்தானும்
    ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்
    அம்புத நால்களால் நீடுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.5
    70 பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு
    பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
    நாகமும் பூண்டநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    போகமும் நின்னை மனத்துவைத்துப்
    புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
    ஆகமு டையவர் சேருங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.6
    71 கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்
    கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்
    நாவணப் பாட்டுநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    பூவண மேனி இளையமாதர்
    பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து
    ஆவண வீதியில் ஆடுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.7
    72 இலங்கை யிராவணன் வெற்பெடுக்க
    எழில்விர லூன்றி யிசைவிரும்பி
    நலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்
    புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும்
    அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.8
    73 பணியுடை மாலும் மலரினோனும்
    பன்றியும் வென்றிப் பறவையாயும்
    நணுகல் அரியநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    மணியொலி சங்கொலி யோடுமற்றை
    மாமுர சின்னொலி என்றும்ஓவா
    தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.9
    74 தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்
    சாதியின் நீங்கிய வத்தவத்தர்
    நடுக்குற நின்றநள் ளாறுடைய
    நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
    எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்
    இரும்பலி யின்பினோ டெத்திசையும்
    அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்
    ஆலவா யின்கண் அமர்ந்தவாறே. 1.7.10
    75 அன்புடை யானை அரனைக்கூடல்
    ஆலவாய் மேவிய தென்கொலென்று
    நன்பொனை நாதனை நள்ளாற்றானை
    நயம்பெறப் போற்றி நலங்குலாவும்
    பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
    பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
    இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
    இமையவ ரேத்த இருப்பர்தாமே. 1.7.11

    இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;
    தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.