MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம்
    பண் - நட்டபாடை

    76 புண்ணியர் பூதியர் பூதநாதர்
    புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
    கண்ணிய ரென்றென்று காதலாளர்
    கைதொழு தேத்த இருந்தவூராம்
    விண்ணுயர் மாளிகை மாடவீதி
    விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
    பண்ணியல் பாடல றாதஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.1
    77 முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்
    முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்
    அத்திய ரென்றென் றடியரேத்தும்
    ஐயன் அணங்கொ டிருந்தவூராம்
    தொத்திய லும்பொழில் மாடுவண்டு
    துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற்
    பத்திமைப் பாடல றாதஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.2
    78 பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்
    போம்வழி வந்திழி வேற்றமானார்
    இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்
    இறையவ ரென்றுமி ருந்தவூராம்
    தெங்குயர் சோலைசே ராலைசாலி
    திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்
    பங்கய மங்கை விரும்புமாவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.3
    79 தேவியோர் கூறின ரேறதேறுஞ்
    செலவினர் நல்குர வென்னைநீக்கும்
    ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்
    அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
    பூவிய லும்பொழில் வாசம்வீசப்
    புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
    பாவியல் பாடல றாதஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.4
    80 இந்தணை யுஞ்சடை யார்விடையார்
    இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்
    வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்
    மன்னினர் மன்னி யிருந்தவூராம்
    கொந்தணை யுங்குழ லார்விழவில்
    கூட்டமி டையிடை சேரும்வீதிப்
    பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.5
    81 குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்
    கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்
    ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்
    உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்
    சுற்றிய வாசலின் மாதர்விழாச்
    சொற்கவி பாடநி தானம்நல்கப்
    பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.6
    82 நீறுடை யார்நெடு மால்வணங்கும்
    நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்
    கூறுடை யாருடை கோவணத்தார்
    குவலய மேத்த இருந்தவூராம்
    தாறுடை வாழையிற் கூழைமந்தி
    தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்
    பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.7
    83 வெண்டலை மாலை விரவிப்பூண்ட
    மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்
    வண்டமர் பூமுடி செற்றுகந்த
    மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்
    கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்
    கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்
    பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.8
    84 மாலும் அயனும் வணங்கிநேட
    மற்றவ ருக்கெரி யாகிநீண்ட
    சீலம் அறிவரி தாகிநின்ற
    செம்மையி னாரவர் சேருமூராம்
    கோல விழாவி னரங்கதேறிக்
    கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்
    பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.9
    85 பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்
    பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்
    தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்
    சைவரி டந்தள வேறுசோலைத்
    துன்னிய மாதரும் மைந்தர்தாமும்
    சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்
    பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்
    பசுபதி யீச்சரம் பாடுநாவே. 1.8.10
    86 எண்டிசை யாரும் வணங்கியேத்தும்
    எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்
    பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்
    பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்
    கண்டல்கள் மிண்டிய கானற்காழிக்
    கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன
    கொண்டினி தாயிசை பாடியாடிக்
    கூடு மவருடை யார்கள்வானே. 1.8.11

    இது சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்,
    தேவியார் - மங்களநாயகியம்மை