MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.12 திருமுதுகுன்றம்
    பண் - நட்டபாடை

    119 மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
    தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்
    கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு
    முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே. 1.12.1
    120 தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்
    இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்
    மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்
    முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. 1.12.2
    121 விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
    டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்
    களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு
    முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே. 1.12.3
    122 சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா
    நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்
    அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்
    முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே. 1.12.4
    123 அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்
    கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்
    மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு
    முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 1.12.5
    124 ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்
    கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்
    சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்
    மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 1.12.6
    125 தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை ()முடிய
    மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்
    விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை
    முழவோடிசை ()நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.
    () முடியர் என்றும் பாடம்.
    () நடமுன் செயும் என்றும் பாடம். 1.12.7
    127 செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
    கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்
    மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா ()
    முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.
    () குறை யில்லா என்றும் பாடம். 1.12.8
    127 இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய
    செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்
    புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே
    முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே. 1.12.9
    128 அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்
    மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்
    கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி
    முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. 1.12.10
    129 முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்
    புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த
    நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்
    பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே. 1.12.11

    இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
    சுவாமிபெயர் - பழமலைநாதர்;
    தேவியார் - பெரியநாயகியம்மை.