MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  

    7. திருவெம்பாவை
    (திருவண்ணாமலையில் அருளியது - சக்தியை வியந்தது)
    (வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா)

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
    சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
    மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
    மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
    வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
    போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
    ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
    ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155

    பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
    பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
    நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
    சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
    ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
    கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
    தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
    ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156

    முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
    அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
    தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
    பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
    புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
    எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
    சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
    இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157

    ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
    வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
    எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
    கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
    விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
    கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
    உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
    எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158

    மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
    போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
    பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
    ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
    கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
    சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
    ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
    ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 159

    மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
    நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
    போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
    வானே நிலனே பிறவே அறிவரியான்
    தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
    வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
    ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
    ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 160

    அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்
    உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
    சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
    தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
    என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும்
    சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
    வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
    என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161

    கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும்
    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்
    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
    வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162

    முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
    உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
    இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
    என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய். 163

    பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
    பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
    ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
    கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
    ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
    ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 164

    மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
    கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
    ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்
    செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
    மையார் தடங்கண் மடந்தை மணவாளர்
    ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
    உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங்
    எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165

    ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
    தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
    கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
    காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
    வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
    ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
    பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
    ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166

    பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
    அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
    தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்
    எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
    பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
    சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
    கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப்
    பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167

    காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
    கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
    சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
    வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
    சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
    பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன்
    பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168

    ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
    சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
    நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
    பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
    பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
    ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
    வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
    ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169

    முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
    என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
    மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
    பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
    என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
    தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
    முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
    என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170

    செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
    எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்
    கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
    இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
    செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
    அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
    நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
    பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171

    அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
    விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
    கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
    தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
    பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்
    விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்
    கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
    பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172

    உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
    அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
    எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
    எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
    எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
    கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
    இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
    எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173

    போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
    போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
    போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
    போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
    போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
    போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
    போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174

    திருச்சிற்றம்பலம்