MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.14 திருக்கொடுங்குன்றம்
    பண் - நட்டபாடை

    141 வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
    கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
    ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்
    தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே. 1.14.1
    142 மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்
    குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
    அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
    எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே. 1.14.2
    143 மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
    குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
    கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
    வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே. 1.14.3
    144 பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
    குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
    பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த
    பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே. 1.14.4
    145 மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
    கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்
    நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
    பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே. 1.14.5
    146 கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்
    கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
    அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
    பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே. 1.14.6
    147 மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
    குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
    அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
    நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே. 1.14.7
    148 முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து
    குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
    ஒட்டாவரக் கன்றன்முடி ஒருபஃதவை யுடனே
    பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே. 1.14.8
    149 அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை
    குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
    மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்
    இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே. 1.14.9
    150 மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
    குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
    புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
    பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே. 1.14.10
    151 கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக்
    கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி
    ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
    ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே. 1.14.11

    இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர்; கொடுங்குன்றீசர் என்றும் பாடம்.
    தேவியார் - அமுதவல்லியம்மை; குயிலமுதநாயகி என்றும் பாடம்.