MEIKANDAR INSTITUTE &
SPIRITUAL SCHOOL OF LEARNING

chulinks.in




This part of web page is available as android app

* We need to pay for the server
* For operation we need funds
* Cosider helping us
* Support us by making a donation
* Donation allows us to work for you
* Donate via Paypal  


    1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை
    பண் - நட்டபாடை

    163 பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்
    போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்
    காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்
    ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே. 1.16.1
    164 மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்
    புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்
    கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த
    அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே. 1.16.2
    165 கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்
    பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்
    சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்
    துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே. 1.16.3
    166 தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்
    பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை
    மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்
    அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே. 1.16.4
    167 மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்
    கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்
    பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை
    அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.5
    168 மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்
    பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை
    என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி
    அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே. 1.16.6
    169 முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி
    பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை
    கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்
    அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.7
    170 இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்
    விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்
    புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை
    அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.8
    171 செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்
    பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை
    வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி
    அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே. 1.16.9
    172 நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
    போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை
    ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்
    சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே. 1.16.10
    173 பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
    அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்
    கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்
    சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே. 1.16.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பசுபதிநாயகர்,
    தேவியார் - பால்வளைநாயகியம்மை.
    பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்.